|
விருச்சிகம் ராசி பலன்கள்
ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here
ராசி மண்டலத்தில் இந்த ராசி 8வது ராசியாகும் ஆங்கிலத்தில் இந்த ராசியை ஸ்கார்ப்பியோ (SCORPIO) என்று அழைப்பர். இது ஒரு ஸ்திர ராசியாகும். ஸ்திரம் என்றால் நிலையானது என்று பொருள். மேலும் மாறாத தன்மை உடையது. மேலும் இது “மென்மையான” ராசி என்றும் அழைக்கப்படுகிறது. அதனால் இது ஒரு “சலனமற்ற ராசி” என்று குறிக்கப்படுகிறது. மேலும் இது பெண் ராசியாகும். இது “இரட்டை ராசி” என்றும் அழைக்கப்படும். பஞ்சபூத தத்துவங்களில் நீர்த்தத்துவமான ஜல ராசியை இந்த ராசி குறிக்கிறது.
இந்த ராசியின் உருவமாக “தேள்” குறிக்கப்படுகிறது. அதனால் இது ஒரு ஊர்வன ராசியாகக் கருதப்படுகிறது. ஊர்வனவற்றில் சிலவற்றில் விஷமுள்ளதும் ஒரு சிலவற்றில் விஷமில்லாதவைகளும் உள்ளன. உதாரணமாக பாம்பு ஒரு ஊர்வன இனத்தைச் சேர்ந்தது பாம்புகளில் விஷமுள்ளது அல்லது விஷமற்றது என இருவகைகள் உள்ளன. ஆனால் “தேளில்” விஷம் உள்ளது விஷமற்றது என்று எதுவும் இல்லை. எல்லாமே விஷம் உள்ளது தான். எனவே இந்த ராசியை “கீடக ராசி” என்றும் அழைப்பர். கீடக என்றால் ஊர்வன அல்லது ஊர்ந்து செல்வன என்று பொருளாகும். “தேள்” ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது. தேளுக்கு பலகால்கள் உள்ளதால் இந்த ராசி “பலகால் ராசி” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ராசியை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். ராசி மண்டலத்தில் 210 டிகிரி முதல் 240 டிகிரி வரை இந்த ராசி வியாபித்துள்ளது. விசாக நட்சத்திரத்தின் 4ம் பாதமும் அனுஷ நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் கேட்டை நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் இந்த ராசியில் அடங்கியுள்ளன.
இந்த ராசி செவ்வாய் வீடாக வருவதால் பூமி காரகனான செவ்வாய் பகவான் இந்த வீட்டில் ஆட்சியாகவும் நவக்கிரங்களில் வளரும் தேயுமான சந்திரபகவான் இந்த ராசியில் நீசமாகவும் ஆயுள்காரகனான சனிபகவான் இந்த ராசியில் பகை பெற்றும் மற்றகிரகங்கள் நட்பாகவும் சமமாகவும் இருந்து பலன் அளித்து வருகின்றன.
உடலமைப்பு (STRUCTURE)
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த இந்த ராசிக்காரர்களின் உடல் எப்பொழுதும் சற்று உஷ்ணமாகவே இருக்கும். நல்ல உயரமான தோற்றமும் ஆஜானபாகுவான உருவ அமைப்பும் உடையவர்கள். கண்கள் எப்பொழுதும் சற்று சிவந்தே இருக்கும். அதே சமயம விழிகள் இரண்டும் அழகாகவும் பற்கள் ஒழுங்காகவும் சுருண்ட கூந்தலும் உடையவர்கள். நல்ல சதைப்பற்றான உடலமைப்பும் முகத்தில் ஒருவித தேஜஸ்ம் உடையவர்கள். எப்பொழுதும் மந்தகலாசம் புன்னகை பூத்த வண்ணமிருப்பர்.
குணநலன்கள் (CHARACTER)
பஞ்சபூத தத்துவங்களில் இந்த ராசி நீர்ராசியாக வருவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல அறிவும் சதா சிந்தித்துக் கொண்டும் நல்ல கற்பனை வளத்துடனும் விளங்குவார்கள். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாதலால எப்பொழுதும் போராட்ட குணம் உடையவர்கள். செவ்வாய் போர்க்கிரகம் ஆதலால் எப்பொழுதும் போராடியே வாழ்வில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பார்கள். மேலும் எப்பொழுதும் ஒரு லட்சியத்தை வைத்தே போராடுவார்கள். அந்த லட்சியத்தை அடையும் வரை போராடிச் கொண்டேயிருப்பார்கள். எப்பொழுதும் ஓய்வு என்பது இல்லாமலே சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டேயிருப்பார்கள்.
செவ்வாய் ஒரு பாபக்கிரகம் ஆகும். மேலும் இது ஒரு தீக்கோள் ஆகும். அதாவது ஒரு நெருப்புக் கிரகம் ஆகும். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை தூக்கி எறிந்து பேசும் இயல்புடையவர்கள். இவர்களது பேச்சு மற்றவர்களை சங்கடப்படுத்தும் விதமாக அமையும். தாங்கள் எண்ணியதை நேரடியாகவ் சொல்வதிலும் பேசுவதிலும் வல்லவர்கள் மற்றவர்கள் மனம் புண்படுமே என்ற கவலை கொள்ளமாட்டார்கள். மனதிற்கு சரி என்று பட்டதை உடனே சொல்லும் இயல்புடையவர்கள். மற்றவர்கள் செய்த நற்காரியங்களை உடனே மறந்துவிடுவர்.
மற்றவர்களின் பேச்சைக் கேட்பது போல் ஒரு தோற்றம் உடையவர்களேயின்றி இவர்கள் யாருடைய பேச்சுக்கும் கட்டுப்படாதவர்கள் தங்களை ஒரு இலட்சியவாதியாகவோ தீவிரவாதியாகவோ தங்களைத் தாங்களே சித்தரித்திக் கொண்டு தனக்கென ஒரு கூட்டத்தைக் கூட்ட முற்படுவார்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடமாட்டார்கள். அதே சமயம் தங்களைச் சார்ந்த ஒரு பிரச்சினை வந்தால் அதில் அடிமுடி காணாமல் விடமாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்யமாட்டார்கள். ஆறப்போட்டு கடைசிவரை யோசித்து அதன்பின்பே அந்தக் காரியத்தை செய்ய முற்படுவார்கள்.
செவ்வாய் ஒரு போர்க்குணம் உள்ள கிரகம் ஆதலால் இவர்கள் மற்றவர்களைப் பேசி தங்களுக்குக் கீழ் பணிபுரிய வைப்பதில் கெட்டிக்காரர்கள். மேலும் இவர்களை ராஜதந்திரிகள் என்று குறிப்பிட்டாலும் அது தகும். மற்றவர்களை தங்களது தந்திரமான பேச்சால் வயப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள் போல் இருப்பார்களேயின்றி தங்களுக்கென்று சில ரகசியங்களை முன் வைத்துப் பேசியும் செயல்படுத்தியும் வாழ்வர். தங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை நன்கு வேலை வாங்கி அவர்களின் வெறுப்பையும் பகையையும் சம்பாதித்துக் கொள்வார்கள். தாங்கள் இழந்த அத்தனையையும் திரும்பப்பெற கடினமாக முயற்சி மேற்கொண்டு அதில் படிப்படியாக முன்னேற்றத்தையும் காண்பர்.
பொருளாதாரம் (FINANCE)
இந்த ராசிக்கு 2வது ராசியாக தேவர்களுக்கு குருவான குருபகவான் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கையில் பணம், நகைகள் இவைகளை வைத்திருப்பர். பணப்புழக்கம் எப்பொழுதும் ஒரே சீராக இருக்கும். குறிப்பாக ஆபரணங்களில் அதிக அளவில் முதலீடு செய்து லாபம் அடைவர். எப்பொழுதும் நகைகள் வாங்குவதிலும் அவற்றை அணிவதிலும் ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள். பங்குப்பத்திரங்களில், நகைகளில் முதலீடு செய்வதை எப்பொழுதும் விரும்வுவர். சிறுசிறுக சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எப்படி சேமிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவும் ஞானமும் உடையவர்கள்.
திருமணம் (MARRIAGE)
இந்த ராசிக்கு 7வது மனைவி ராசியாக சுக்ரன் வீடாக வருவதால் இந்த ராசியின் ஆண், பெண், இருபாலருக்கும் அழகான கணவன், மனைவி அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் மணவாழ்வும் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். மேலும் 7ம் வீடு சுக்ரன் வீடாக வருவதால் காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும். விருச்சிகராசி ஆண்கள் தங்கள் மனைவியை நன்கு கவனித்து வேண்டியதை செய்து அவர்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ள அதிகம் விரும்புவர். அதே சமயம் இந்த ராசி பெண்களும் தங்கள் கணவன்மேல் அளவற்ற அன்பும் காதலும் கொண்டு விளங்குவர். இவர்களுக்குள் எப்பொழுதும் விட்டுக்கொடுத்து வாழும் பண்பு அமைய வேண்டும். இல்லையேல் அடிக்கடி கணவன் மனைவி இவருவருக்குள்ளும் பிரச்சினைகள் போராட்டங்கள் ஏற்பட்டு பிரிந்து மறுபடியும் சேர்ந்து வாழ வாய்ப்பு அமையும். மேலும் தேவையில்லாமல் பேசுவதை இருவரும் குறைத்துக் கொள்ளல் வேண்டும். அப்பொழுது தான் குடும்ப கௌரவத்தையும் பெருமையையும் இருவரும் நிலைநாட்ட முடியும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் அன்பும் பிரியமும் உடையவர்கள். இவர்களுக்கு நல்ல சந்தானபாக்யம் அமையும். குழந்தைகளால் நல்ல யோகங்கள் இந்த ராசிக்கு ஏற்படும்.
நோய் (DISEASE) கடன் (LOAN)
ராசி மண்டலத்தின் 8வது ராசியாக இந்த ராசி இருப்பதால் உடலில் இனங்கான முடியாத வியாதிகள் வந்து போகும். விருச்சிக ராசி சிறுநீர்ப்பைகளையும் ஆண் பெண் இன உறுப்புகளைக் குறிப்பதால் இவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை, பித்தப்பையில் பிரச்சினைகள் ஏற்படும். தலை, கண், மூளை போன்ற உறுப்புகளில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். மேலும் மேஷ ராசி 6வது ராசியாக வருவதால் அடிவயிற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும் மேலும் கல் அடைப்பு போன்ற பிரச்சினைகளும் நரம்பு சம்பந்தமான வியாதிகளும் ஏற்பட்டு விலகும். உடல்பருமன், தூக்கமின்மை போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும். குறிப்பாக “மனநிம்மதி” என்ற மனோவியாதிகள் ஏற்பட்டு விலகும். எனவே உடலில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை ஆரம்பத்திலே நல்ல மருத்துவரை அணுகி சரிபார்ப்பது நலம். இல்லையேல் அது தீர்க்க முடியாத அல்லது தீராத வியாதி மற்றும் ஆப்ரேஷனில் கொண்டு போய்விடும்.
இந்த ராசிக்காரர்கள் அதிக கடன் வாங்கவும் அதே அளவு வட்டி கட்டவும் வாய்ப்புகள் அமையும். கடனும் கேட்ட இடத்தில் கிடைக்கும். மேலும் பெண்களால் எப்பொழுதும் விரையம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். அதானாலே கடன் வாங்கி அதிக அளவில் வட்டி கட்ட வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு கடன் வாங்கவும் அதைப் படிப்படியாக அடைப்பதற்கும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சேந்து அமையும். கடன்கள் கட்டுக்குள் இருக்குமாறு எப்பொழுதும் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
வேலை (JOB) தொழில் (BUSINESS)
விருச்சிக ராசிக்கு 10வது தொழில் வேலை ராசியாக சிம்மராசி வருவதால் அரசு, அரசு சார்ந்த துறைகள் மத்திய மாநில அரசுகளில் உயர்பதவி வகிக்க வாய்ப்புகள் அமையும். மேலும் 6ம் பாவம் செவ்வாய் ஆக வருவதால் மருத்துவம், பொறியியல், துறைகளில், வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் செவ்வாய், சூரியன் சார்ந்த போலீஸ், ராணுவம், ஆராய்ச்சித் துறைகளில் வேலை மற்றும் தொழில் அமையும். மாற்று மருத்துவம், கெமிக்கல் போன்ற துறைகளிலும் I.A.S, I.P.S, போன்ற துறைகளிலும் அல்லது உயர் படிப்புப் படித்து உயர்துறைகளில் வேலை வாய்ப்பு அமையும். பெயர்பெற்ற தனியார் கம்பெனிகளில் வேலை கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும்.
7ம் வீடு சுக்ரன் வீடாக வருவதால் ஆடை, ஆபகாரணங்கள் பெண்கள் அணியும் பொருட்கள் அழகு சாதானப்பொருட்கள், தங்கள், வெள்ளி, போன்ற துறைகளில் சுயதொழில் தொடங்கலாம், பீங்கான், கண்ணாடி, கலைப் பொருட்கள், சேவைத்துறைகளில் சுயதொழில் தொடங்கலாம்.
வேலை மற்றும் தொழில் இவை இரண்டையும் பொதுப்படையாகவே இங்கு சிறிய அளவில் மட்டுமே குறிப்பிடமுடியும். இந்த விஞ்ஞான உலகத்தில் வேலை மற்றும் தொழில் என்றால் அவை பல்கிப் பெருகி பரந்து விரிந்து இருப்பதால் அவற்றைப் பெரிய அளவில் குறிப்பிடமுடியாது. அவரவது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து மட்டுமே என்ன படிப்பு என்ன வேலை என்ன தொழில் என்று குறிப்பிட முடியும். மேலும் அதற்கேற்ற தசா புத்தியும் செயல்பட வேண்டும். எனவே இங்கு வேலை, தொழில்கள் இவற்றைப் பற்றி ஒரு குறிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டக் கிழமை : செவ்வாய், வியாழன், ஞாயிறு
அதிர்ஷ்ட எண் : 1,3,9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்டக் கற்கள் : மாணிக்கம், பவளம், புஷ்பராகம்
|
|
|
|